
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் அத்திப்படுகை கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் செந்தில். நேற்று மாலை தருமபுரம் பகுதியில் உள்ள புதிய புறவழிச்சாலை அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர் ஒருவர் மதுபான பாட்டிலால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த புதுத்துறை வடக்குத் தெருவை சேர்ந்த மனோகர் என்பவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
சம்பவம் குறித்து தகவலறிந்த காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் காட்கே, காரைக்கால் தெற்கு காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ், நகர காவல் நிலைய ஆய்வாளர் அறிவுச்செல்வன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்திற்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? கொலை செய்தது யார்? கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சிகிச்சையில் உள்ள மனோகரிடம் சம்பவம் எப்படி நடந்தது? யார் செந்திலை தாக்கியது? யார், யாரெல்லாம் இருந்தனர்? என்றும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






