
புதுச்சேரி சட்டப்பேரவை சட்டமன்ற அலுவல் நடத்தை விதிகள் 1966 அதனடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் 22 அத்தியாயங்களில் 317 விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சட்டமன்ற நடவடிக்கையில் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
கேள்வி நேரம், குறுகிய கால கேள்விகள், அரை மணி நேர விவாதம், கவன ஈர்ப்பு தீர்மானம், குறுகிய கால விவாதம், ஒத்திவைப்பு பிரேரணை, தனிநபர் தீர்மானம், மானிய கோரிக்கைகளில் விவாதங்கள் என பல வாய்ப்புகளை உறுப்பினர்கள் சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளை இது போன்ற வாய்ப்புகளின் கீழ் பயன்படுத்திக்கொள்ள அதற்கான கால அவகாசங்கள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதை புரிந்து கொண்டு சட்டமன்ற நடத்த விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
சட்டமன்ற நிகழ்வின் சபாநாயகர் அனுமதி இல்லாமல் எந்த உறுப்பினரும் பேச முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு உறுப்பினர் தினம் மூன்று கேள்விகளை எழுப்பலாம். கேள்விகள் பேச்சு வடிவம் இல்லாமல் சிறிய அளவில் இருக்க வேண்டும். எந்த ஒரு உறுப்பினரும் பிற உறுப்பினரை பார்த்தோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பார்த்தோ பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். எது பேசுவதாக இருந்தாலும் சட்டப்பேரவை தலைவரைப் பார்த்து பேச முற்பட வேண்டும்.
நாம் கேள்வி நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மூன்று துணை கேள்விகள் கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. அந்த கேள்விகள் உரை போன்று இல்லாமல் சிறிய அளவில் விபரமாக கேட்க வேண்டும்.
சட்டமன்ற நிகழ்வின் போது பூஜ்ஜிய நேரம் என்பது மிக மிக முக்கியமான நேரம் ஆகும். முதல் நாள் சட்டமன்றம் நிறைவு பெற்ற பிறகு மறுநாள் சட்டமன்றம் கூடும் வரை மக்கள் சம்பந்தப்பட்ட அதிமுக்கியமான பிரச்சனைகள் குறித்து அவையின் கவனத்திற்கு கொண்டுவர உறுப்பினர்கள் இந்த பூஜ்ஜிய நேரத்தை பயன்படுத்திகொள்ளலாம். பூஜ்ஜிய நேரத்தில் முக்கிய பிரச்சனைகளை சபையின் கவனத்திற்கு கொண்டுவர ஒரு உறுப்பினர் விரும்பினால் சட்டசபை துவக்கப்படுவதற்கு முன்பு சட்டப்பேரவை செயலரிடம் அது சம்பந்தமான கடிதத்தை வழங்கி இருக்க வேண்டும். அரசின் கவனத்திற்கு மின்தடை, கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு, சாலை சீரமைப்பு போன்ற அன்றாட பிரச்சனைகள் குறித்து பூஜ்ஜிய நேரத்தை பயன்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் தங்களின் வருகையை தினசரி உறுதி செய்து கொள்ள வேண்டும். சட்டமன்ற நிகழ்வு அன்றைய தினம் முடிவு பெரும் பொழுதும் சட்டமன்ற நிகழ்வில் தொடர்ந்திருப்பது சரியான ஒன்றாகும். எனது அனுபவத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் முடிந்தவுடன் அறையை விட்டு வெளியே சென்று விடுவார்கள் அது தவறான ஒன்றாகும்.
புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும் பல முக்கியமான பிரச்சினைகள் கூட நடைமுறைப்படுத்துவதை காலதாமதம் ஏற்பட்டு கிடப்பில் போடப்படுகிறது. நம் சட்டப்பேரவை செயலகத்துக்கு உரிய அதிகாரங்கள் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாம் வலியுறுத்த வேண்டும். சமீப காலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாத பல்வேறு பிரச்சனைகளில் கூட நீதிமன்றங்கள் தலையிட்டு வருகின்றன. நாம் ஏற்கனவே கூறியது போன்று நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்ட செயலகம் இவை எல்லாம் தனித்தனி சுதந்திரமான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் படைத்து உள்ளாக உள்ளன. ஆனாலும் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் குறுக்கீடுகள் நிர்வாகத்துறையில் அவ்வப்போது அதிகம் ஏற்படுவதால் அரசின் கொள்கை முடிவுகளை கூட செயல்படுத்த முடியாத ஒரு தேக்க நிலை ஏற்படுகிறது. மக்கள் பிரதிதிநிகள் நாம் இந்த விஷயத்திலும் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நிலை நிறுத்த வேண்டும்.
துணைநிலை ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்தும்போது எந்த உறுப்பினரும் அவருக்கு இடைஞ்சல் ஏற்படுகின்ற விதத்தில் செயல்பட கூடாது. அவர் உரை நிகழ்த்தும் போது வேறு எந்த பிரச்சனை குறித்தும் எந்த உறுப்பினருக்கும் பேசுவதற்கு உரிமை இல்லை.
நிதித்துறை பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பட்ஜெட் வாசிக்கும் போது உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் அருகில் சென்று கோஷம் எழுப்புவது, பட்ஜெட் புத்தகத்தை பறிக்க முயற்சிப்பது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக நமது செயல்பாடுகள் அனைத்தும் மக்களுடைய கவனத்திற்கு உட்பட்டதாகும். சட்டமன்றத்தின் கண்ணியத்தையும், மாண்புகளையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் கடமையாகும். அதற்கு உட்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் மக்களின் நற்பெயருக்கு உரிமை உள்ளவர்களாக ஆக வேண்டும். அந்த வகையில் உங்கள் அனைவரின் பணி சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் நாஜீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ, சட்டத்துறை சார்பு செயலாளர் ஜான்சி, ஓய்வு பெற்ற வரவு செலவு திட்ட அலுவலர் பொன்னுசாமி, சட்டப்பேரவை செயலாளர் தயாளன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தனர்.






