புதுச்சேரி: இந்தியாவில் தற்போது பருவகால இன்புளுயன்சா A(H1N1) / பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்டு வரும் கண்காணிப்பின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் பருவகால இன்புளுயன்சா A(H1N1) வைரசாகவே உள்ளது. புதிய அல்லது அசாதாரண மரபணு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பெரும்பாலான தொற்றுகள் லேசானவையாகவும், தானாகவே குணமடையக்கூடியவையாகவும் உள்ளன.
முக்கிய அறிகுறிகள்
இன்புளுயன்சா A(H1N1) தொற்று பொதுவாக திடீரென கீழ்க்கண்ட அறிகுறிகளுடன் தொடங்கலாம்:
- அதிக காய்ச்சல், குளிர் மற்றும் நடுக்கம்
- தொடர்ந்து காணப்படும் வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி
- கடுமையான தசை வலி மற்றும் உடல் சோர்வு
- தலைவலி
- மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு
- குறிப்பாக குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சுயமாக பயன்படுத்த வேண்டாம்
இன்புளுயன்சா A(H1N1) என்பது வைரஸ் தொற்று என்பதால், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வைரஸ்களை அழிக்காது. எனவே, மருத்துவரின் ஆலோசனை இன்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தேவையின்றி பயன்படுத்துவது உடலில் உள்ள பயனுள்ள நுண்ணுயிரிகளை பாதிப்பதுடன், ஆன்ட்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (Antimicrobial Resistance) ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
தகுதியான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அறிகுறிகள் மற்றும் தேவையான ஆய்வகப் பரிசோதனைகளின் அடிப்படையில் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் – மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே
ஒசல்டமிவீர் (Oseltamivir) போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் குறிப்பிட்ட மருத்துவ நிலைகளில், மருத்துவரின் பரிந்துரை மற்றும் கண்காணிப்பின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சுயமாக உட்கொள்ளக் கூடாது.
ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ உதவி பெறவும்
கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்:
- சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல் அல்லது மிக வேகமாக சுவாசித்தல்
- மார்பு வலி அல்லது தொடர்ந்து மார்பில் அழுத்தம் ஏற்படுதல்
- உதடுகள் அல்லது விரல்கள் நீல நிறமாக மாறுதல்
- இருமும்போது ரத்தம் கலந்த சளி வெளியேறுதல்
- அதிக தூக்கநிலை, குழப்பம் அல்லது இயல்புக்கு மாறான ஆழ்ந்த மயக்கம்
- வலிப்பு
- தொடர்ந்து வாந்தி ஏற்பட்டு, வாய்வழியாக திரவங்களை உட்கொள்ள முடியாத நிலை
குழந்தைகளிடம் உணவு அல்லது பால் உட்கொள்ள முடியாமை, அதிக சோர்வு அல்லது மந்தநிலை, மூச்சுவிடும்போது அசாதாரண சத்தம், மார்பு பகுதி கடுமையாக உள்இழுக்கப்படுதல் அல்லது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
தொற்று தடுப்பு நடவடிக்கைகள்
பொதுமக்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது:
- சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குறைந்தது 20 வினாடிகள் கைகளை அடிக்கடி நன்கு கழுவ வேண்டும்.
- சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானை (Sanitizer) பயன்படுத்தலாம்.
- இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.
- டிஷ்யூ கிடைக்காதபோது முழங்கையின் உட்புறப் பகுதியைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.
- அதிக மக்கள் கூடும் மற்றும் காற்றோட்டம் குறைந்த மூடிய இடங்களில் முறையாகப் பொருத்தக்கூடிய முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது.
- காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தாமல் குறைந்தது 24 மணி நேரம் காய்ச்சல் இல்லாத நிலை ஏற்பட்ட பின்னரே பள்ளி, பணியிடம் மற்றும் சமூகக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
- உடல்நிலை சரியில்லாதபோது மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது தொற்று பரவலைக் குறைக்க உதவும்.
இன்புளுயன்சா A(H1N1) தொற்றின் பெரும்பாலான நிலைகள் லேசானவை மற்றும் குணமடையக்கூடியவை. இருப்பினும், ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
IEC, சுகாதாரத்துறை, புதுச்சேரி





