
புதுச்சேரி, ஆக. 18: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவு தானிய மானியத்தை, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) முறையில் டிஜிட்டல் வாலட் மூலம் வழங்கும் நடைமுறை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இதுவரை உணவு தானிய மானியத் தொகை நேரடி பயன் பரிமாற்றம் (DBT) முறையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட நடைமுறையின்படி, குடும்ப அட்டைதாரரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணின் மூலம் டிஜிட்டல் வாலட் கணக்கில் CBDC வடிவில் மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது.
1,027 பயனாளிகளுடன் தொடக்கம்
புதுச்சேரியில் CBDC முறை கடந்த 26.02.2026 அன்று முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 1,027 பயனாளிகள் இம்முறையில் இணைக்கப்பட்டு, அவர்களுக்கான டிஜிட்டல் வாலட்டுகள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுக்கான உணவு தானிய மானியத் தொகை CBDC வடிவில் டிஜிட்டல் வாலட்டுகளில் வரவு வைக்கப்பட்டது.
புதுச்சேரி பிராந்தியத்தில் சுமார் 6,34,390 பயனாளிகளுக்கு இதுவரை DBT முறையில் உணவு தானிய மானியம் வழங்கப்பட்டு வந்தது. இவர்களை CBDC முறைக்கு மாற்றும் நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பயனாளிகளின் அலைபேசி எண்களை பதிவு செய்து இணைக்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
1.64 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு
இந்த முகாம்களின் மூலம் இதுவரை 1,64,045 குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அலைபேசி எண்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்து இணைத்துள்ளனர்.
அவர்களில் 1,02,470 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 2026 மாதத்திற்கான உணவு தானிய மானியம் ஏற்கனவே CBDC முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21-க்குள் நடவடிக்கை அவசியம்
PMGKAY திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இனி உணவு தானிய மானியம் CBDC முறையில் மட்டுமே வழங்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை தங்களது அலைபேசி எண்ணை குடும்ப அட்டையுடன் பதிவு செய்து இணைக்காத பயனாளிகள், 21.08.2026-க்குள் தங்களது தொடர்புடைய நியாய விலைக் கடைக்கு சென்று, அலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அலைபேசி எண்ணை உரிய முறையில் இணைக்காத குடும்ப அட்டைதாரர்களின் உணவு தானிய மானியம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் துறை எச்சரித்துள்ளது.
எனவே, அனைத்து தகுதியான பயனாளிகளும் உடனடியாக தங்களது அலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து, உணவு தானிய மானியம் தொடர்ந்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவுறுத்தியுள்ளது.






