சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் வேலய்யன்

புதுச்சேரி: சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, போக்குவரத்து போலீஸ், கனரக வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா தலைமை தாங்கினார். எஸ்.பி., பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வேலய்யன் வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, தன்வந்திரி, செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள், டிப்பர் லாரி, லாரி, மினி லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கனரக வாகன உரிமையாளர்கள் தங்களுடைய பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., திவ்யா பேசுகையில், ‘புதுச்சேரியில் தற்போது சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் அதிவேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கி இறந்து வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ள இடங்களில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். லாரிகளில் டிரைவர்களுடன் கிளினர்களை பணியமர்த்த வேண்டும். டிரைவர்கள் மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது என உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்க வேண்டும். மீறினால், அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலை பாதுகாப்பு வீதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
மணல், ஜல்லி உள்ளிட்டவைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மூடி எடுத்து செல்ல வேண்டும். அதிவேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களின் டிரைவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
நகரப்பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு, தினமும் காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. அதனை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.






