
இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலை அறிவித்ததையடுத்து, காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான திருமதி இஷிதா ராட்டி, ஐஏஎஸ், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
அதன் ஒரு பகுதியாக இன்று 18.03.2026 அன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை அவர் நேரில் பார்வையிட்டார். அப்போது, ஸ்ட்ராங் ரூம்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி லஷ்மி சௌஜன்யா, ஐபிஎஸ், அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது, மாவட்ட துணை தேர்தல் அதிகாரியும் துணை ஆட்சியருமான திரு செந்தில்நாதன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரி மற்றும் தேர்தல் பணியுடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்திற்கான பொது பார்வையாளரான திரு அனூப் கிஞ்சி, ஐஏஎஸ், அவர்கள் அறிஞர் அண்ணா கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ட்ராங் ரூமையும் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான திருமதி இஷிதா ராட்டி, ஐஏஎஸ், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி லஷ்மி சௌஜன்யா, ஐபிஎஸ், மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரி ஆகியோருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுதல், ஸ்ட்ராங் ரூம்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படுதல், கண்காணிப்பு முறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுதல் மற்றும் தேர்தல் செயல்முறைகள் முழுமையாக சீருடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முறையாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.






