
புதுச்சேரி,உப்பளம் தொகுதி டாக்டர் அம்பேத்கர் சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வது சம்பந்தமாக, உப்பளம் சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அவர்கள் தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் வீரசெல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஹரிபிரசாத், காவல்துறை கண்காணிப்பாளர் பக்தவச்சலம், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், வருவாய் அதிகாரி பிரபாகரன், காவல்துறை ஆய்வாளர்கள் செந்தில்குமார், வெங்கடாஜலபதி, ஜெய்சங்கர், இனியன், வேலையன் மற்றும் துறைமுகத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
கடலூர் சாலை ரோடியர்பேட் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டுமிடத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர கார்கள், ஆட்டோ செல்வதற்காக வழி பாதையை உடனடியாக அமைக்க வேண்டும் கடலூர் சாலையில் ரயில்வே பாலம் கட்டுவதால் வழி பாதை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அம்பேத்கர் சாலை உள்ளிட்ட பல குறுகிய பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் தினசரி பாதிக்கப்படுகின்றனர்.
துறைமுக மைதானத்தில் அவ்வப்போது பிரம்மாண்டமான தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுக்கப்படுவதால் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரிசலில் அம்பேத்கர் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அல்லோல் படுகின்றனர்.
நகரின் பிரதான தனியார் பள்ளிகளான பெத்தி செமினர் மேல்நிலைப்பள்ளி, அம லோற்பவம் மேல்நிலைப்பள்ளி, குமாகுலேட் ஆகிய பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மூன்று பள்ளிகளிலும் கல்வி பயிலும் நிலையில், அவரவர் பள்ளிக்கு வரும் வாகனங்களை கூட தங்கள் பள்ளி மைதானத்தில் அனுமதிக்காததால், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளியின் வாடகை வேன்கள் பள்ளி விடும் வரை சாலையில் நிறுத்தப்படுகின்றன. அதேபோன்று ரயில் நிலையம் உள்ள சுப்பையா சாலையில் தனியார் வாடகை வேன்கள், பேருந்துகள் பார்க்கிங் இடமாக பயன்படுத்துகிறார்கள். அம்பேத்கர் சாலை சுப்பையா சாலையில் நீண்ட நாட்களாக பல வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், நடைபாதையில் பல தற்காலிக கடைகளால் மூடி வைத்து திறக்கப்படாமல் போக்குவரத்து நெரிசலை உருவாக்குகின்றனர். தற்போது இந்திரா காந்தி விளையாட்டுமைதானத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர்.இந்த வாரத்தில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக துறைமுக மைதானத்தில் தனியார் பொருட்காட்சியில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் அல்லல்படும் உப்பளம் தொகுதி மக்கள் அதிக அளவில் சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும். துறைமுக வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற அனுமதி அளிக்கும்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன் துறைமுக மைதானத்தில் ஒரு நாள் பாட்டு கச்சேரி நடந்த போது மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாக்கப்பட்டனர். துறைமுக வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கும்போது, போக்குவரத்து நெரிசிலை தவிர்க்க மாற்று பாதை ஏற்பாடுகள் உடனடியாக செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கமாக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார். இது சம்பந்தமாக இவ்வாரத்தில் அம்பேத்கர் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடி மாற்று வழி பாதை ஏற்பாடுகளை செய்வதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசிலை கட்டுப்படுத்த இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.






